Published Date: April 26, 2025
CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

சென்னை : மாதம்தோறும் ரூபாய் 200 கட்டணத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இலவச வை-பை:
சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
எங்களது துறை சார்பாக பொதுமக்களுக்கு சுமார் 300 இடங்களில் இலவச வைபை சேவை அளித்துக் கொண்டிருக்கிறோம். அம்மா உணவகம் பஸ் நிலையம் என சென்னையில் மட்டும் 1869 இடங்களிலும், ஆவடி, தாம்பரம்,கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் 700 இடங்களிலும் இந்த சேவை வழங்குகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 8 ஆயிரம் இ-சேவை மையங்கள் இருந்தன. இப்போது அது 25 ஆயிரம் ஆகி இருக்கிறது. கடந்தாண்டு மட்டும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் அரசு அலுவலகங்களுக்கு வராமலே இ-சேவை மையங்களில் மூலமே அரசின் சேவையை பெற்று இருக்கிறார்கள்.
அதிவேக சேவை:
தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் மூலம் அதிவேக இணையதள சேவை வழங்குவதற்கு 57 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைபர் கேபிள் அமைத்து 15 ஆயிரத்து 525 கிராமங்களுக்கு கொண்டு சென்று இருக்கிறாம். கடந்த ஆட்சியில் இந்த பணிகள் தாமதமாக நடந்தது. இப்போது அதனை வேகப்படுத்தி 93 சதவீத பணிகள் முடித்து இருக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம். இப்போது வரை சுமார் 2 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு இணையதள சேவையை இந்த நெட்வொர்க் மூலம் வழங்கி வருகிறோம். தமிழக முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இந்த சேவையை முழுமையாக அளித்த பிறகு அதை படிப்படியாக பொது மக்களுக்கு அளிக்கும் முயற்சியை மேற்கொண்டு இருக்கிறோம்.
கேபிளுக்கு இருப்பது போல இன்டர்நெட் ஆப்ரேட்டர்கள் மூலம் அதிவேக பைபர் இணையதள சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். கூடிய விரைவில் தனிநபர் வீட்டுக்கு சுமார் 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் ஒரு மாதத்திற்கு ரூபாய் 200 கட்டணத்தில் வழங்கப்படும்.
அரசு கேபிள் :
தமிழக அரசாங்கம் கேபிள் டிவி நடத்தக்கூடாது என்று மத்திய அரசு நமக்கு பலமுறை கடிதம் அனுப்பியுள்ளது. அங்கே தமிழ்நாட்டை சேர்ந்த இணைய அமைச்சர் முருகன் அந்த துறையில் இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இது பொதுமக்களுக்கு பயனளிக்கும் ஒரு சேவை. இதை நீங்கள் ஏதோ ஒரு சட்டத்தை கூறி நிறுத்தக்கூடாது என்ற வாதத்தை வைத்து இதுவரையில் அவர்களுடைய கடிதங்களை தாண்டி தான் அரசு கேபிள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சட்டசபை உறுப்பினர்கள் 38 தொழில்நுட்ப பூங்கா வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். நான் சபாநாயகரிடம் கேட்டுக்கொள்வது, இனிமேல் அந்த கோரிக்கைகளை எல்லாம் இந்தத் துறைக்கு அனுப்பாமல் தொழில்துறைக்கு அனுப்பி விடுங்கள். ஏதாவது நான் உண்மையை சொன்னால் அதை அரசியலாக்கிவிடுகிறீர்கள். பஸ் டிக்கெட்களை இ-சேவை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிக்க இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
Media: DAILYTHANTHI